May 19, 2016

தார் பாலைவனம் : தனி உலகம்


வெயில்.

நம் அனைவருக்கும் பரிச்சயமான ஒன்று. வெயிலை சுவாசித்து வெயிலை தோழனாக பாவித்து, வெயிலோடு விளையாடிய அனுபவம் நிச்சயமாக இருக்கும். ஜன்னல் வழியே நூலிழையாக வீட்டினுள் நுழைவதும், படிக்கட்டுகளில் வழிந்து செல்வதும், வயல் வெளியில் வெளிச்சம்  பாய்ச்சுவதும் வெயிலின் பன்முகங்களில் சில முகங்கள். ஆடு மாடுகளின் முதுகில் தவழும் வெயில். சாலையில் சறுக்கி செல்லும் வாகன  முகடுகளில் மின்னல் கீற்றை ஏற்படுத்தும் வெயில் என வெயிலோடு வளர்ந்த மனிதர்கள், நாம்.

ஆனால், வெயிலுக்கு பெயர் பெற்ற பாலைவன வெயில் முற்றிலும் மாறுபட்டது. 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தை உள்வாங்கி நிற்கும் மூர்க்கத்தனமான வெயிலையும், அதை தாங்கி நிற்கும் பாலைவனத்தையும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மீரில் காணலாம். அங்குள்ள தார் பாலைவனத்தில்தான் கரைகளற்று ஓடும் நதியென வெயில் பரவி நிற்கிறது. திக்கு தெரியாமல் வியாபித்து நிற்கும் வெயிலை பிரதிபலிக்கும  மணற்பரப்புடன் கூடிய தார் பாலைவனம், தனி உலகம். சூரியனுக்கு மிகவும் பிடித்த பகுதி.

அதிகாலையில் கடலில் குளித்தெழும் உதயசூரியனை கண்டு மகிழ்ந்திருப்போம். பாலைவன மணலில் விழித்தெழும் சூரியனை பார்த்து  இருக்கிறீர்களா? அதை தார் பாலைவனத்தில் காணலாம். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மீரில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் தார் பாலைவனம்.  அங்கிருந்து பாகிஸ்தான் எல்லை 15 கி.மீ. மார்ச் மாதத்தில் கூட அதிகாலை 6 மணியை தாண்டியும் இருட்டு சூழ்ந்து கிடக்கிறது. இருட்டு என்றால் குறைவான வெளிச்சம் அவ்வளவுதான். அந்த குறைந்த வெளிச்சத்திலும் பாலைவன காற்றுடன் கலந்து மணல் துகள்கள் எழுந்து நின்று வரவேற்கின்றன.

இதுவரை பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட மஞ்சள் நிற மணல் துகள்களை வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தொலைதூரத்தில் மிக  மெல்லிய புள்ளியாக தோன்றி மெதுமெதுவாக சூரியப்பந்து விரிவடைய துவங்குகிறது. அது, பாலைவன சூரியோதயம். கடலில் குளித்தெழும்  சூரியனை போலவே பாலைவன மணலில் குளித்தெழுகிறது, சூரியன். மணலில் இருந்து எழும்பிய வேகத்தில் சில மணித் துளிகளிலேயே தனது  பெரிய கால்களால் வானத்தை நோக்கி சரசரவென ஏறத் துவங்குகிறது.

காலை நேர மஞ்சள் ஒளிச் சிதறல் பட்டதும் மணல் பரப்பில் புதுப் பொலிவு  கூடுகிறது. அந்த மணலை ஆவலுடன் அள்ளி எடுத்தால் காதலனை தேடிச் செல்லும் காதலியாக ஆற்றாமையுடன் வந்து சேரும் காற்று அதை  கலைத்து விடுகிறது.

வளைந்து நெளிந்து செல்லும் காற்றின் காலடித் தடத்தை பாலைவன மணலில் தெளிவாக பார்க்கலாம். காற்றின் காலடி தடங்கள்தான் பாலைவன மணலில் ஓவியமாகவும், அலைபோன்ற கோடுகளாகவும் கிடக்கின்றன. காற்றின் மூர்க்கம் அதிகமாகும்போது ஒரு மணல் குன்றையே பெயர்த்து  எடுத்து சற்று தள்ளிச் சென்று வைக்கிறது. பாலைவனத்தில் மணல் குன்றுகளை கட்டுவதும் அழிப்பதுமாக இருக்கும் காற்றின் சேட்டையை ரசித்துக்  கொண்டிருக்கும்போதே வியர்த்துக் கொட்டுகிறது.

சுறு சுறுவென வானில் ஏறிய சூரியன், சில மணி நேரத்துக்குள் 40 டிகிரி செல்சியசில் சுட்டெரிக்க ஆரம்பித்து விடுகிறது. வெயிலையே குடித்து  வளர்ந்த வெப்ப பிரதேசத்து மனிதனாக இருந்தால் கூட, அந்த வெயிலை எதிர் கொள்வது மிகவும் கடினம். பாலை வனத்தில் பகல் நேரம் என்பது  சிக்னலுக்கு காத்திருக்கும் சமயத்தில் ஊர்ந்து செல்லும் சரக்கு ரயில் போன்றது. மணல் குன்றுகளுக்கு இடையே தோன்றும் கானல் நீர் கூட அருகில்  செல்லும் வரை நீரோடை போல காட்சியளித்து மாயாஜாலம் செய்கிறது.

பாலைவனத்தில் குவிந்து கிடக்கும் மிக நுண்ணிய மணல் துகள் ஒவ்வொன்றும் ஆச்சரியம். மணல் துகள்களை தன்னுள் வைத்துள்ள பாலைவனம்  ஒரு புரியாத புதிர். உள்ளே தொலைதூரம் சென்று விட்டால் வழி தெரியாமல் சுற்றித் திரிந்து ஆகாரமின்றி அவதிப்பட நேரிடலாம். அதை  நினைத்தால், சங்க இலக்கியங்களில் பாலை நிலத்தில் செல்லும் காதலர்களின் நிலைமை காட்சியாக மனத் திரையில் விரிகிறது.

ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், குஜராத் என இந்தியாவின் 4 மாகாணங்கள் மற்றும் பஞ்சாப், சிந்து என பாகிஸ்தானின் 2 மாகாணங்களில் விரிந்து  பரவி கிடக்கும். தார் பாலைவனத்தின் தொத்த பரப்பளவு 2 லட்சம் சதுர கி.மீட்டர். தார் பாலைவனத்தை ஆரவல்லி மலை சூழ்ந்திருக்கிறது. எனினும்,  ராஜஸ்தான் என்ற பெயருடன் மட்டுமே தார் நினைவுக்கு வருகிறது. இந்தியாவின் அணுகுண்டு சோதனைகளுக்கு களம் அமைத்து தருவதும் தார்  பாலைவனம் தான் என்பது கூடுதல் தகவல்.

- வை.ரவீந்திரன், புதுச்சேரி
Share:

சென்னை மெயில் பற்றி...


சென்னை மெயில் - தாம்பரத்தில் இருந்து ஞாயிறுதோறும் வெளியாகும் நெய்பர்வுட் செய்தித்தாள். நெய்பர்வுட் செய்தித்தாள்கள் வரலாற்றில் முதல்முறையாக, முழுக்க முழுக்க நாளிதழ்களுக்கு இணையான வடிவமைப்பில்&

2013-ம் ஆண்டு, ஆகஸ்ட் 21-ந் தேதி, சேலையூர் பதிப்பாக ஆரம்பிக்கப்பட்ட சென்னை மெயில், தற்போது தாம்பரம், குரோம்பேட்டை பதிப்புகளாகவும் வெளிவந்து கொண்டிருக்கிறது. சேலையூர் - 30 ஆயிரம் காப்பிகள், தாம்பரம் - 30 ஆயிரம் காப்பிகள், குரோம்பேட்டை - 30 ஆயிரம் காப்பிகள் என்று, மொத்தம் 90,000 சென்னை மெயில் பிரதிகள், இந்த பதிப்புகளின் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகள்தோறும் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன.

விளம்பரதாரர்களின் வியாபாரத்தை பெருக்குவதில் சென்னை மெயில் தனிக் கவனம் செலுத்துகிறது. இதற்காக, வாங்கும் சக்தி அதிகம் கொண்ட மக்களின் வசிப்பிடங்களை உன்னிப்பாகத் தேடி எங்களின் சென்னை மெயில் பயணிப்பதை மிகவும் பெருமையோடு கூறிக்கொள்கிறோம்.

அதோடு, விளம்பரதாரர்களுக்கு என்று, சிறப்பு செய்திக் கட்டுரைகளை வெளியிட்டுத் தருவதிலும் தனிக்கவனம் செலுத்துகிறோம். சிறிய வாடிக்கையாளர்கள் முதல் கார்பரேட் வாடிக்கையாளர் வரை, எல்லோரையும் சந்தோஷப்படுத்துவதை சென்னை மெயில் தன்னுடைய பாக்கியமாகவே கருதுகிறது.

ரூபி பில்டர்ஸ், மஹிந்திரா லைஃப் ஸ்பேஸ், வி.ஜி.என்., உள்ளிட்ட பல நிறுவனத்தினர் எங்களின் மேலான வாடிக்கையாளர்களாக இருப்பதில் நாங்கள் கூடுதல் மகிழ்ச்சி கொள்கிறோம். செய்தித் தொகுப்பில் சென்னை மெயில் வெளிவருவது தனிச்சிறப்பு.

வாங்கும் சக்தி அதிகம் கொண்ட மக்கள், படித்தவர்கள், நடுத்தர மக்கள் சென்னை மெயிலை தொடர்ந்து வாசிப்பதால், இதில் வெளியாகும் விளம்பரங்களுக்கு உடனடி பலன் கிடைக்கும். இதை, எங்களின் ஒவ்வொரு வாடிக்கையாளரும் சொல்வதை, இங்கே மகிழ்ச்சியோடு பதிவு செய்கிறோம்.

வீட்டுக்கு ஒரு பேப்பர் மட்டுமே விநியோகம், அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒவ்வொரு வீட்டுக்கும் தேடிச்சென்று பேப்பர் சப்ளை செய்வது, என்கிற கொள்கையில் நாங்கள் உறுதியாக இருப்பதால், சென்னை மெயிலில் வெளியாகும் விளம்பரங்களுக்கு அதிக ரீச் கிடைக்கும். சின்ன விளம்பரம்... பெரிய வியாபாரம் என்பதை, சென்னை மெயிலில் விளம்பரம் செய்யும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் அனுபவபூர்வமாக உணரலாம், என்பதற்கு நாங்கள் உத்தரவாதம் தருகிறோம்.

அன்பான வாடிக்கையாளர்களே... சென்னை மெயிலோடு இணைந்து பயணிக்க வாருங்கள். எங்களோடு சேர்ந்து உங்கள் வர்த்தகத்தை பெருக்கி பயனடையுங்கள்.
Share: